இதையொட்டி சங்கரன்கோவில் நகர்மன்ற அலுவலக வாயில் முன்பு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால், நகர்மன்ற அலுவலகத்தில் உள்ளே பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள் மட்டும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, நகர்மன்ற உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்று தங்களது வாக்குகளை செலுத்தினர். மொத்தமுள்ள 30 நகர்மன்ற உறுப்பினர்களில் 28 உறுப்பினர்கள் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக வாக்குகளை செலுத்தினர். இரு உறுப்பினர்கள் மட்டுமே உமா மகேஸ்வரிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன்படி, ரகசிய வாக்கெடுப்பு நிறைவேறியதாகவும், நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், உமா மகேஸ்வரி தோல்வி அடைந்து பதவியை இழந்தார்.
இந்த நிலையில் நேற்று வாக்கெடுப்பின் போது உமாமகேஸ்வரி, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குப்பெட்டியை தனது கைகளால் தள்ளிவிட்டார். இதுபற்றி போலீசில் புகார் செ்யப்பட்டது. போலீசார் உமா மகேஸ்வரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.