திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 19.5.2018 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியவுடன், அவரைத் தொடர்ந்து வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். அப்போது மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் பொது சொத்துக்கள் சேதம் அடைந்தது.
போலீசாரின் டூவீலர் மற்றும் பேரி கார்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது குறித்து விமான நிலைய போலீசார்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், அரசியல் ஆலோசனைக் குழு
உறுப்பினர் பெல் ராஜமாணிக்கம், வழக்கறிஞர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மீதும், நாம் தமிழர் கட்சி
ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அவரது கட்சியை சேர்ந்த 14 பேர் மீதும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்ல
நடந்து வந்தது. கடந்த 16-ந் தேதி விசாரணை நடந்தபோது. சீமான் உட்பட அவரது கட்சியினர் மற்றும் மதிமுகவினர் நேரில் ஆஜராகி இருந்தனர். பின்னர், வழக்கின் தீர்ப்பு வரும் 19-ந் தேதி (இன்று)அளிக்கப்படும் என நீதிபதி கோபிநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். வழக்கு விசாரணைக்கு சீமான் தவிர குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் வந்திருந்தனர்.
இதையடுத்து மதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்நிகழ்வில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் தலைமையில் நிர்வாகிகள் ஆசிரியர் முருகன், செல்லத்துரை, வினோத்,சுபாஷ் மணி ,ஜெயசீலன்,அடைக்கலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மோதல் தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு 2022ல் முடித்து வைக்கப்பட்டது. பின்னர் இரு தரப்பினர் மீதும் போலீசார் பொதுச்சத்துக்கு சேதமடைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.