பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் வீடுகள் 40 வருடங்களாக குடியிருந்த வீடு மிகவும் பழுது அடைந்துள்ளதால் புதிய குடியிருப்பு கட்டி தர வேண்டும் தமிழக அரசுக்கு மலைவாழ் மக்கள் கோரிக்கை, பொள்ளாச்சி- ஜூலை-19 தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வருகின்றனர். வனப்பகுதிக்கு உள்ளேயேயும், வெளியேயும் வசித்து வரும் அவர்களுக்கு புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி மத்திய, மாநில அரசுகள் அந்த மக்களுக்கு ஏராளமான நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. வன கிராமங்கள் மட்டுமல்ல, பழங்குடி மக்கள் தங்கியுள்ள வருவாய் கிராமங்களிலும் வீடு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் தொடர்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி, அண்ணாநகர் கிராமங்களில் அரசு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்தது. தற்போது அந்த வீடுகள் சிதலமடைந்து, மக்கள் மீது அடிக்கடி சுவர் விழுந்து உயிருக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது. குறிப்பாக மழை காலங்களில் அவர்கள் சந்திக்கும் அவலம் வார்த்தையால் வர்ணிக்க முடியாது என்கிறார்கள் அவர்கள்
இதுகுறித்து ஈ டிவி பாரத் சார்பில் நேரடியாக கள ஆய்வு செய்தோம். முதலில் வால்பாறை செல்லும் வழியில் ஆழியார் அணை அருகே உள்ள புளியங்கண்டி கிராமத்துக்கு சென்றோம். அங்கு எரவாளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் வீடுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்த சுவர்கள், எஞ்சியுள்ள சுவர்களில் விரிசல்கள், தொங்கும் கம்பிகள் என்று அங்குள்ள வீடுகள் எலும்பு கூடாய் காட்சியளித்தன.
இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியார் அணை உள்ள பகுதியில் குடியிருந்தோம். அணை கட்டுவதற்காக எங்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இந்தப் பகுதிக்கு குடிவந்து சுமார் 40 ஆண்டுகளாகிவிட்டன. மழை காலத்தில் அருவி போல வீட்டுக்குள் தண்ணீர் ஒழுகும். இங்கு நானும், கணவரும் மட்டும் தான் இருக்கிறோம். மேலே இருந்து எப்போது சுவர் விழுகும் என்று சொல்ல முடியாது. பல முறை சுவர் இடிந்து விழுந்துள்ளது. இப்போது நாங்கள் வீட்டுக்குள் தூங்குவது இல்லை. அங்கு சில பொருள்களை மட்டும் வைத்து, நாங்களே வீட்டுக்கு முன்பு தூங்கி வருகிறோம். மழை பெய்தால் அரசு அதிகாரிகள் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்று தங்க சொல்வார்கள். அதன் பிறகு கண்டு கொள்ள மாட்டார்கள். அரசியல்வாதிகள் ஓட்டு கேட்கும்போது மட்டுமே வருவார்கள். மற்ற நாள்கள் இங்கு எட்டி கூட பார்க்க மாட்டார்கள். நாங்கள் சொல்வதை யாருமே காது கொடுத்து கேட்பதில்லை. அரசு பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றனர்.
இதே போன்று வேட்டைக்காரன் புதூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராமத்தில் மலசர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை இது குறித்து அவர்கள் கூறுகையில்
எங்கள் அடிப்படை பிரச்னைகளுக்காக அரசிடம் போராடி, சோர்வடைந்து பாதி மக்கள் அந்தப் பகுதியில் இருந்து காலி செய்து சென்றுவிட்டனர்.
எங்கள் கிராமத்தில் அரசு 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க அரசு நிதி ஒதுக்கியும், கட்டுமானப் பணிகள் குறித்து புகார் எழுந்ததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பணிகளை பாதியிலேயே நிறுத்தி சென்றுவிட்டனர். பல வீடுகள் அஸ்திவாரத்துடனும், பல வீடுகள் பாதி கட்டிய நிலையிலும் இருக்கின்றன. சில வீடுகளில், அந்த வீட்டை விட உயரமான மரம், செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
எங்களுக்கு இடம் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே இடம் பெயர்ந்து நாடோடியாக ஓடிக் கொண்டே இருப்போம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இங்கு பட்டா கொடுத்தனர். வீடு கட்டி கொடுப்பதாகவும் அறிவித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக அந்தப் பணிகளும் முடங்கிவிட்டன. கையில் பணம் இருந்த ஒரு சிலர் மட்டும் தங்களின் சொந்த செலவில் வீடு கட்டியுள்ளனர். மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. எங்கள் பகுதியில் இருந்து சற்று கீழே சென்று தான் குடிநீர் சுமந்து வர வேண்டும். மின்சார வசதி இல்லாததால் குழந்தைகள் படிப்பதற்கு சிரமப்படுகிறார்கள். இங்கிருந்து 1 கி.மீ தொலைவில் அரசு தொடக்கப் பள்ளியும், உயர்நிலை, மேல்நிலை படிக்க 12 கி.மீ தொலைவு பயணித்து வேட்டைக்காரன் புதூர் பகுதிக்கும் செல்ல வேண்டும். அதற்கு முறையான பேருந்து வசதியும் இல்லை. இதனால் கல்வி இடைநிற்றல் அதிகளவு உள்ளது. கழிப்பறை வசதியும் இல்லை. . ரேஷன் கடைக்கு கூட 10 கி.மீ பயணிக்க வேண்டும். 10 கி.மீ சுற்றளவில் மருத்துவமனையும் இல்லை. எங்களை இறந்தால் புதைப்பதற்கு சரியான சுடுகாடு கூட இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், கோவை மாவட்ட செயலாளர் பரமசிவம், கூறுகையில் பழங்குடி மக்களுக்கு அரசு ஒரு சென்ட் பரப்பளவில் தொகுப்பு வீடு கட்டி கொடுத்துள்ளது. நீண்ட காலமாகிவிட்டதால் மேற்கூரை பாதிப்படைந்து கம்பிகள் உருகுலைந்துவிட்டன. கர்ப்பிணி பெண்கள் முதல் குழந்தைகள் வரை ஏராளமானோர் மீது சுவர் விழுந்து காயமடைந்துள்ளனர். அண்ணாநகர், புளியங்கண்டி கிராமங்களில் மட்டுமே சுமார் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். மழை பெய்யும்போது அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைப்பார்கள். அந்த இடத்திலும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பதில்லை. அதனால் எங்கள் உயிர் இங்கேயே போகட்டும் என மக்கள் ஆபத்தான நிலையில் வசித்து வருகிறார்கள். மறுபக்கம் தம்மம்பதி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தலா ரூ.3.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகளை எடுத்த கான்ட்ராக்ட் நிறுவனம் வீட்டை தரமாக கட்டவில்லை. மக்கள் புகார் எழுப்பியவுடன் பணிகளை அப்படியே நிறுத்தி சென்றுவிட்டனர். பழங்குடியின மறுவாழ்வு திட்டத்தின் கீழ், தனியார் தோட்டங்களில் இருந்து மறு குடியமர்த்தப்பட்ட கிராமங்கள் இவை. இந்த சூழ்நிலையால் சில மக்கள் மீண்டும் தனியார் தோட்டங்களுக்கே சென்று வருகிறார்கள். வீட்டை சீரமைப்பதற்கான பொருளாதாரம் மக்களிடம் இல்லை. மாற்று வீடு கட்டித்தர பல முறை கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை. உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்றார்.