மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
கடந்த மே 2ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்ததோடு, தாடி வைத்திருந்தனர் என்றும் கூறியிருந்தார். ஆதினத்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதோடு, சர்ச்சையாகவும் வெடித்தது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதினம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதுரை ஆதினத்திற்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் போலீஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதனையடுத்து சென்னை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தினார்.
முன்னதாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் மடத்திற்குள் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் யாரும் இருக்கக் கூடாது என கூறி காவல்துறையினர் அறிவுறுத்தி, அனைவரையும் வெளியேற்றினர். ஆனால் பாஜகவினர் விசாரணை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் விசாரணை அதிகாரிகளை உள்ளே அனுமதித்த நிலையில், மதுரை ஆதீனத்திடம் விசாரணை அதிகாரி நேரடியாக விசாரணைகளை மேற்கொண்டார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாததால் உதவிக்கு ஒருவரை உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என ஆதீனம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் போலீஸார் தரப்பில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மடத்தில் வைத்து சுமார் ஒரு மணிநேரம் , சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் பல்வேரு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. தற்போது அதீனத்திடம் நடத்திய விசாராணை நிறைவடைந்ததாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையை முடித்துக்கொண்டு அறிக்கைகளுடன் விசாரணை அதிகாரிகள், மதுரை ஆதீன மடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.