இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவராக இருப்பவர் ஜெகதீப் தன்கர். ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது 5 ஆண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் தன்கர் நேற்று திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். கடந்த ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், அதுவே சரியான தருணமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தன்கர். இவர் தொடக்கத்தில் காங்கிரஸ்காரர். வழக்கறிஞர். 1951 மே 18-ம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். கடந்த 2003-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றிய தன்கர், மம்தா பானர்ஜிக்கு பெரும் தலைவலியாக இருந்தார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் 2022-ல் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
தனது பதவிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஆதரவு விலை மதிக்க முடியாதது என்று ராஜினாமா கடிதத்தில் தன்கர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தன்கர் கூறி உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தன்கர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறி இருப்பதாவது:
எனது உடல்நிலையை கருத்தில் கொண்டும், டாக்டர்களின் மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவதற்காகவும், உடனடியாக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலமைப்பின் பிரிவு 67(A) வின் கீழ் இந்த கடிதத்தை சமர்ப்பிக்கிறேன்.
எனது பதவி காலத்தில் எனக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்த தங்களுக்கும், பிரதமர் மோடி, எம்.பிக்கள், ஆகியோருக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பதவி காலத்தை பெருமையாக கருதுகிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் நேற்று தான் தொடங்கியது. மாநிலங்களவையின் தலைவராக இருந்து ராஜ்யசபாவை துணை ஜனாதிபதிதான் நடத்துவார். முதல் நாளே அவையில் வழக்கம் போல எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டன.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்தது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ காரணங்கள் என தன்கர் கூறி உள்ள போதிலும், ராஜினாமாவுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
உச்சநீதின்ற நீதிபதி கவாய், அரசியல் சாசனமே பெரியது என கூறி இருந்தார். இந்த நிலையில், வழக்கறிஞரான ஜெகதீப் தன்கர் அரசியல் சாசனம், கோர்ட், ஆகியவற்றை விட நாடாளுமன்றமே பெரியது என்று கருத்து தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த மராட்டிய மாநாட்டில் பேசிய தன்கர், ஒரு மாநிலத்தை கைப்பற்ற அதன் கலாச்சாரத்தை பின்னுக்கு தள்ளி, அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என்று தெரிவித்த கருத்தும் சர்ச்சையானது.
கடந்த 1969ம் ஆண்டு மே 3ம் தேதி அன்றைய ஜனாதிபதி ஜாகிர் உசேன் பதவி காலத்தில் இறந்ததைத் தொடர்ந்து, கிரி அதே நாளில் செயல் தலைவராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கிரி 20 ஜூலை 1969 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு இந்தியாவில் ஒரு துணை ஜனாதிபதி இப்போது தான் பதவியை ராஜினாமா செய்தார்.