கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமச் சாலை ஓரங்களில் மருத்துவம், பஸ் பாடி, கட்டிட இடிபாடு கழிவுகளை கொட்டி சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம்.
கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டில் உள்ள குண்டுமாச்சான்பட்டி, மட்டி பள்ளம், சின்னமநாயக்கன்பட்டி கிராமங்களுக்கு செல்லும் சாலையின் ஓரங்களில் இரவு நேரங்களில் இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள், மருத்துவ கழிவுகள்,
பேருந்து கூண்டு கட்டும் நிறுவன கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி தீ வைத்து விட்டுச் செல்கின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை நேரத்தில் காகித கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை அப்பகுதி பொதுமக்கள் மடக்கி பிடித்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், லாரியை விசாரணைக்காக ஓட்டுநரையும் அழைத்துச் சென்றனர்.