கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று காலமானார். அவருக்கு வயது 101 கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அத்துடன் சிறுநீரக பிரச்னையாலும் அவதிப்பட்டு வந்ததால், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3. 20 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. தற்போது அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது மகன் வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சிறிது நேரத்தில் தர்பார் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும்.
அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இன்று முதல் மாநிலம் முழுவதும் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இன்று மதியம் தேசிய நெடுஞ்சாலை வழியாக துக்க ஊர்வலமாக ஆலப்புழாவுக்கு அச்சுதானந்தன் உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கட்சி அலுவலகத்தில் உடல் வைக்கப்படும். நாளை ஆலப்புழா சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
அச்சுதானந்தனுக்கு வசுமதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அச்சுதானந்தன் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.
அச்சுதானந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.