ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித தலம். சீதையை மீட்க இங்கிருந்து தான் ராமன் சென்றதாக கூறப்படுகிறது. இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அமாவாசை, பவுர்ணவமி தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
தற்போது ராமேஸ்வரத்திற்கு ரயில், சாலை மார்க்கமாகத்தான் வரவேண்டி உள்ளது. எனவே விமான நிலையம் அமைத்தால் இன்னும் அதிகமான பக்தா்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே ராமேஸ்வரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
விமான நிலையம் அமைக்க ராமேஸ்வரம் அருகில் 5 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து உள்ளது.இந்த ஐந்து இடங்களிலிருந்து மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையம் சாத்தியக்கூறு அறிக்கை ஒன்றை தமிழக அரசு தயாரிக்கும்.. இந்த அறிக்கையின் அடிப்படையில், அடுத்த ஆண்டுக்குள் ஒரு இடத்தை அரசு தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க சுமார் 700 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஒரு ஓடுபாதையுடன், கோட் சி விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட விமான நிலையத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.