ராமதாஸ் எதிர்ப்பையும் மீறி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க ‘ என்கிற நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்கினார். அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் ராமதாஸ் பெயரில்லை. 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்க்கு முதல்நாளே பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே அன்புமணி ராமதாஸின் தமிழக உரிமை மீட்பு பயணத்துக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தடையில்லை என்றும்,’தமிழக உரிமை மீட்பு பயணம்’ திட்டமிட்டபடி தொடரும் என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. தேவையான நடவடிக்கை எடுப்பதற்காகவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும் கூறியுள்ளது. அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் கண்காணிப்பாளர்கள் எடுக்குமாறும் டிஜிபி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.