தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது . இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது . இதனால் வைகைஅணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது . தற்போது 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததை அடுத்து மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
இதனால் வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ கடக்கவோ குளிக்கவோ வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்கும்படியும் பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்த உடன் இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கையும் , 69 வது அடியாக உயர்ந்த உடன் மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். நீர்மட்டம் 71 அடியாக நிரம்பி முழுமை அடைந்தவுடன் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படும். தற்போது நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1794 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 869 கன அடியாகவும் நீர் இருப்பு 4818 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.