மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமான துரைவைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களைச் நேரில் சந்தித்து, இரு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.
மருத்துவக் கல்விக்காக ரஷ்யா சென்ற இந்தியக் குடிமகன் தமிழ்நாட்டின் கடலூரை சேர்ந்த கிஷோர் சரவணனை எந்நேரத்திலும் ரஷ்ய அரசு, ரஷ்யா – உக்ரைன் போர் முனைக்கு தள்ளும் வாய்ப்பு உள்ளது. வழக்கில் சிக்கவைக்கப்பட்ட இந்த மாணவனுக்கு ஏற்கனவே போர் பயிற்ச்சியும் அளிக்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.
எனவே மிகத் துரிதமாக செயல்பட்டு அந்த மாணவனையும், அவரோடு அங்கு சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்களையும் உடனடியாக மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியது அவசரத் தேவை என வலியுறுத்தினேன்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களை சந்தித்து கடிதம் கொடுத்து விளக்கியதையும், அத்துடன், நாடாளுமன்ற மக்களவையில் இது குறித்து நான் வேண்டிக் கேட்டுக்கொண்டதையும் வெளியுறவுத்துறை செயலாளரிடம் எடுத்துரைத்தேன்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செயலாளர், ஏற்கனவே எனது கோரிக்கை உள்துறை அமைச்சகத்தில் ஏற்கப்பட்டு அதற்குண்டான ஆவண தயாரிப்பில் உள்ளதாகவும், அதே நேரம் ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே குற்றம் சுமத்தப்பட்ட கைதிகளுக்கான ஒப்பந்தம் உள்ளதால், அந்த மாணவனை இந்தியாவிற்கு அழைத்து வந்து தண்டனையை தொடரச்செய்ய வழிவகை உள்ளதையும் கூறி அதையும் வலியுறுத்துவோம் என்றார். உள்துறை அமைச்சகத்தில் இதற்கான பணிகள் நடந்துவரும் இந்த வேளையில், அந்த மாணவனை போர் முனைக்கு அனுப்பிவிடக் கூடாது என்பதை, இந்தியாவிற்கான ரஷ்ய தூதரை அழைத்து அழுத்தமாக தெரிவித்துவிடுவதாகவும் கூறினார்.
நிச்சயமாக கிஷோர் சர்வணன் உள்ளிட்ட அத்தனை இந்தியர்களும் ரஷ்யாவிலிருந்து மீட்கப்படுவர் என்றும் நம்பிக்கை அளித்தார்.
அத்துடன், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு, கைது செய்யப்படும் துயர நிலை நீடித்து வருகிறது. கடந்த 29.07.2025 அன்று, கச்சத்தீவு அருகே 14 இந்திய மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகக் குற்றம் சுமத்தி, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்ற விவரத்தை கூறி,
இவர்கள் எந்தப் படகுகளில் பயணித்தனர், எங்கு, எப்போது கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த விவரங்களை கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு வழங்கினேன்.
இப்பிரச்சனைக்கு உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வு காண, ஒன்றிய அரசு உரிய பொறுப்பேற்று, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகள் உள்ளிட்ட உடைமைகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
இது குறித்து ஏற்கனவே தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசுடன் பேசி அவர்கள் விடுதலை செய்யப்பட கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த இரண்டு முக்கிய பிரச்சனைக்கும் உரிய பதிலை அளித்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் நம்பிக்கை அளித்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டேன்.
இந்த இரு முக்கியப் பிரச்சனைகளிலும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகளை மக்கள் உற்று நோக்கி, தகுந்த தீர்வை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.