தமிழ்நாட்டில் வரும் 2026 ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதுள்ள திமுக கூட்டணி, பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணி, நடிகர் விஜய், சீமான் ஆகிய4 அணிகள் போட்டியிடலாம் என்பது தற்போதைய நிலை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அப்போது நிலைமையில் மாற்றம் ஏற்படலாம்.
ஜனவரி மாதம் தான் தேர்தல் கூட்டணி குறித்து சரியான முடிவு எட்டப்படும் என்றாலும், இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கி விட்டன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் மாவட்டம் வாரியாக சென்று மக்களை சந்திக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக , அதிமுகவிடம் 50 தொகுதிகளை பெற்று போட்டியிட திட்டமிட்டுள்ளது. அந்த 50 தொகுதிகளில் யார், யாரை நிறுத்தலாம் என்பது குறித்த வேட்பாளர் தேர்வும் மாநில பாஜக சார்பில் நடந்து வருகிறது. மாநில தலைவரான நைனார் நாகேந்திரன், மேலிட உத்தரவின்படி இதில் ஈடுபட்டுள்ளார்.
தற்போதைய 4 எம்.எல்.ஏக்களுக்கும் அதே சீட் வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். தமிழிசை வடசென்னை அல்லது தென்சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. சரத்குமார் நெல்லை, அல்லது விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம். எடப்பாடியுடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்டால் எடப்பாடியை பிரசாரத்திற்கு அழைக்க வேண்டும். அவா் தனக்கு சாதகமாக இருப்பாரா என்ற சந்தேகம் அண்ணாமலைக்கு உள்ளது. மேலும் தனது மாநில தலைவர் பதவியை பறித்தவர் எடப்பாடி தான் என்றும் அண்ணாமலை கருதுகிறார். எனவே சட்டமன்ற தேர்தல் வேண்டாம் என அவர் முடிவு செய்துள்ளாராம்.
ஒருவேளை மேலிடம் வற்புறுத்தி நிற்கவைத்தால், கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.