தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் முகமது. இவர் தனது காரில் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் காரில் கும்பகோணம் திரும்பி வந்துகொண்டு இருந்தார்.
கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த அவர் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை செய்வதற்காக குளித்தலையில் பள்ளிவாசல் உள்ள இடம் நோக்கி கூகுள் மேப் உதவியுடன் தனது காரில் வந்துள்ளார்.
அப்போது பள்ளிவாசல் செல்வதற்காக தென்கரை பாசன வாய்க்காலின் குறுக்கே உள்ள சிறிய நடைபாலத்தை கடந்து செல்லலாம் என்று காட்டியுள்ளது.
இதனால் அவர் நடைபாலத்தின் வழியாக காரை இயக்கிய போது காரின் முன் சக்கரம் பாலத்தின் விளிம்பில் கீழே இறங்கி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது.
தென்கரை பாசன வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் செல்லும் நிலையில் கார் அந்தரத்தில் தொங்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக முகமது உயிர் தப்பினார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை கிரேன் உதவியால் காரோடு வெளியே மீட்டு கொண்டு வந்தனர்.
கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டே சிறிய பாலத்தை கார் கடக்க முயன்று பாலத்தின் விளிம்பில் தொங்கிய சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.