பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இப்பொழுது, பாமகவில் ராமதாஸ், அன்புமணி தரப்பினr மாறி, மாறி பொதுக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளனர்.
கட்சிவிதி 13ன் படி, நிறுவனர் வழிகாட்டுதலின்றி பொதுக்குழுவை கூட்டக்கூடாது என ராமதாஸ் தரப்பு தெரிவிக்க, கட்சிவிதி 15ன் படி, பாமக தலைவர், பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என அன்புமணி தரப்பினர் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ” நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறு யாரும் உரிமை கோர முடியாது. பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அன்புமணி அறிவித்துள்ள பாமக பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதம். செயல் தலைவரான அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கட்சி விதிகளுக்கு எதிரானது. தான் நியமித்த மாவட்டச் செயலாளர்களில் 100 பேரை என்னை சந்திக்கவிடாமல் அன்புமணி தடுத்தார். என்னை சந்திக்க வராத 100 பேருக்கு மாற்றாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறதென்றால் அது என் விஷயத்தில் நடந்திருக்கிறது. தனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையையே வேவு பார்த்த மகன் அன்புமணி மட்டும்தான்”என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.