ஆறு மாதத்துக்கு மேலாக தனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குளித்தலை வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளியால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கே.உடையாபட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி (வயது 42) என்பவர் தனது பட்டாவில் சம்பந்தமில்லாத மற்றொருவர் பெயர் இருப்பதாகவும், அதனை அகற்றக்கோரி குளித்தலை வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரின் மீது உரிய
நடவடிக்கை எடுக்காமல் 6 மாதத்துக்கு மேல் அழைக்களித்து வருவதாகவும், அதிகாரிகள் தனது செல்போனை வாங்கி உடைத்து விட்டதாக, கூறி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்சியர் கார் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் அவரை எழுப்பி ஆசுவாசப்படுத்தி, தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மாற்றுத்திறனாளியான தனது மனு மீது நடவடிக்கை எடுக்காமல் குளித்தலை வட்டாட்சியர் அலட்சியத்தோடு செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்போது போலீசார் அவரை தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.