Skip to content

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

  • by Authour

தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலின் தலைவன் உள்பட 8 பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. இதையடுத்து தமிழக அரசு இந்த கும்பல்களை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த கும்பலை கிழக்கு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இத்தகவல் மக்கள் மத்தியில் பரவி போலீசாருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.

தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் உத்தரவுப்படி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், தனிப்பிரிவு காவலர் அருண், தலைமை காவலர் சரனேஸ் மற்றும் போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த தஞ்சை கீழவாசலை சேர்ந்த முகமது அப்பாஸ் (22), பிரவீன் (28), அரவிந்த் (26), வெங்கடேசன் (20), அம்மாபேட்டை சேர்ந்த சந்தோஷ் குமார் (23), வண்டிக்காரத் தெருவை சேர்ந்த அபிஷேக் (22), விஷ்வா ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போதை மாத்திரை விற்பனை செய்வதில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? இதற்கு மூளையாக செயல்பட்டது யார் ? எங்கிருந்து போதை மாத்திரை வாங்கப்பட்டது ? இவர்களுக்கு போதை மாத்திரைகளை கொடுத்தது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திண்டுக்கல் மரியநாதபுரம் ஹனுமான் நகரை சேர்ந்த ஜோ. நவீன்குமார் (33) என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்வதற்கு தலைவனாக இருந்ததும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் மெடிக்கல் ரெப்பாக பத்தாண்டுகள் பணிபுரிந்தது குறித்தும் போலீசாரிடம் போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து எஸ்.பி., ராஜாராம் உத்தரவின்படி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், தனிப்பிரிவு காவலர் அருண், தலைமை காவலர் சரனேஸ் மற்றும் போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்து சென்று அங்கு தலைமறைவாக இருந்த நவீன் குமாரை தேடி கண்டுபிடித்து அதிரடியாக வளைத்து பிடித்து கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து 600-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நவீன் குமாரை பாதுகாப்பாக தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து நவீன் குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யாருக்கெல்லாம் போதை மாத்திரை சப்ளை செய்துள்ளார் ? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது ? என்று தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. தஞ்சையில் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பலின் தலைவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவல் தஞ்சை மாநகரில் பரவியது. இதை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீசாருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!