சட்டீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அம்மாநிலத்தைச் சேர்ந்த சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக வந்தவர், இரவு 10 மணியளவில் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தின் முன் படுத்து உறங்கியுள்ளனர். மறுநாள் (ஜூலை 27) அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது, சோனு மாணிக்புரியின் 18 மாத குழந்தையான கார்த்திக் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. பல இடங்களில் குழந்தையை தேடியும் கிடைக்காததால், அவர்கள் துர்க் ஜிஆர்பி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பிஎன்எஸ் 137(2) கடத்தல் வழக்கு பதிவு செய்து துர்க் ஜிஆர்பி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சுமார் 45 வயதுடைய ஒரு ஆண் குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரின் புகைப்படத்தை வைத்து விசாரித்தபோது, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சாத்தனூரை சேர்ந்தவர் என தெரியவந்தது. குற்றவாளியை பிடிக்க, துர்க் ஜிஆர்பி காவல் நிலைய உதவி துணை ஆய்வாளர் ஜனக்லால் திவாரி உதவி கோரியதன் பேரில், மயிலாடுதுறை ஆர்பிஎப் ஆய்வாளர் சுதிர்குமார் உத்தரவின் பேரில் தலைமை காவலர் இளையராஜா அம்மாநில போலீசாருக்கு உதவியதன் பேரில், கடத்தலில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா சாத்தனூர் கிராமம் சந்திரன் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆறுமுகம்(45) என்பவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதையடுத்து, சட்டீஸ்கரில் இருந்து வந்திருந்த சோனு மாணிக்புரி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…
- by Authour
