தமிழகத்துக்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023-ம் ஆண்டு அக்டோபரில் தயாரானது. ஆனாலும் வெள்ளப் பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர். பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம். தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம். தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் இருமொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும். 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் இருக்கக்கூடாது. கல்வி, மாநில பட்டியலில் வரவேண்டும்
நீட் தேர்வு இருக்கக் கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
கல்லூரி சேர்க்கையின் போது 12-ம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11-ம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும். சி.பி.எஸ்.சி., சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் அகியவற்றுக்கான கட்டணங்களை சீரமைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ தவிர ‘ஸ்போக்கன் தமிழ்’ மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
அங்கன்வாடி மையங்களுக்கு ‘தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்’ என பெயரிட வேண்டும். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
5 வயது பூர்த்தியானவர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தோடர வேண்டும்.
தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும். தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகள் தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
தாய், தந்தை என பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கலெக்டர் தலைமையில் 1 மனநல ஆலோசகர், 1 சுகாதார அதிகாரி, 1 போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 1 உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட தனிக் குழு அமைக்கலாம்.
தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஏற்பாடு செய்யப்படும்.
மாநில கல்வி கொள்கை குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநிலக் கல்வி கொள்கை அறிக்கை உயர் கல்வி, பள்ளி கல்வி என தனித்தனி துறையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக பள்ளி கல்விக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கொள்கைகள் இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.