மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல், கர்நாடக மக்களவை தேர்தல் உள்பட பல மாநிலங்களில் பாஜகவினர் பெருமளவு கள்ள ஓட்டு போட்டனர் என்று எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வந்தார். பீகாரில் அதே பாணியில் வெற்றிபெற பாஜக நடவடிக்கை எடுத்து வந்தது. இதை ராகுல் கடுமையாக எதிர்த்தார். தேர்தல் கமிஷன் இதனை கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் ஆதாரங்களை வெளியிடும்படி தேர்தல் கமிஷன் கூறியது. இதைத்தொடர்ந்து வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டார்.
அதில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்து இருப்பதாகவும், ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதும், ஒரு வாக்காளருக்கு 4 வாக்குச்சாவடியில் ஓட்டு இருக்கும் ஆதாரத்தையும் ராகுல்காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னை குறித்து விவாதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.
இந்த சூழலில் நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்தார். அதன் விவரம் வருமாறு:
பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியில் 2024ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான், பா.ஜ வேட்பாளர் பி.சி. மோகனிடம் 32,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதி உள்பட கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் நாங்கள் எடுத்த கணக்குப்படி 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் 9 தொகுதிகள் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. இது தொடர்பாக நாங்கள் நடத்திய ஆய்வில் பெங்களூரு மத்திய மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியாவை. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கான படிவம்6ஐ 33,692 பேர் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர். இந்த படிவத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதை கடந்தவர்கள். படிவம் 6ஐ பயன்படுத்தி 70 வயது மூதாட்டியின் பெயர் ஒரே வாக்குச்சாவடியில் 2 முறை சேர்க்கப்பட்டுள்ளது. அந்த 2 ஓட்டும் பதிவாகியுள்ளது.
ஒரே மூதாட்டி ஒரு வாக்குச்சாவடியில் எப்படி 2 வாக்கு போட்டார் என்பதை தேர்தல் ஆணையம்தான் விளக்க வேண்டும். திட்டமிட்ட ரீதியில் தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல பதிவுகளில் வீட்டு எண் 0 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை படுக்கை அறை கொண்ட முகவரியில் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் உள்ளனர். அந்த இடத்தைப் பார்வையிட்டபோது அங்கு யாரும் வசிக்கவில்லை. ஒரு வாக்காளருக்கு ஒரே தொகுதியில் 4 வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது. கர்நாடகாவில் ஒரே நபர் பல பூத்களில் வாக்குகளை செலுத்தியுள்ளார். இப்படி பலர் வாக்குகளை செலுத்தி உள்ளனர். இது தவிர ஒருவருக்கு மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் தலா ஒரு ஓட்டும், பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 2 ஓட்டும் உள்ளது.
இது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமே. இந்த ஆய்வை நாங்கள் செய்து முடிப்பதற்கு எங்களுக்கு 6 மாதங்கள் ஆகி உள்ளது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவை வழங்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் நாங்கள் வாக்காளர் பட்டியலை கவனமாக ஆய்வு செய்வதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவுகளை வழங்கினால் அதை ஆய்வு செய்ய எங்களுக்கு 30 வினாடிகள் போதும். நான் மீண்டும் சொல்கிறேன், அதனால்தான் எங்களுக்கு இதுபோன்ற காகித தரவு வழங்கப்படுகிறது. அதனால் வாக்காளர் பட்டியலை பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. இந்த ஆவணங்கள் ஓசிஆர் ஆப் பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், அவற்றிலிருந்து தரவைப் பெற முடியாது. தேர்தல் ஆணையம் ஏன் இந்த காகிதத் துண்டுகளைப் பாதுகாக்கிறது? தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே இயந்திரம் படிக்க முடியாத ஆவணங்களை வழங்குகிறது.
இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்காததும், சட்டத்தை மாற்றுவதன் மூலம் சிசிடிவி காட்சிகளை அனுமதிக்காததும், தேர்தல்களைத் திருட பாஜவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதை எங்களுக்கு உணர்த்தியது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்ததற்கான ஆதாரங்களை அழிக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க ஜனநாயக நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம்.
ஏனெனில் கடந்த 10-15 ஆண்டுகளாக இயந்திரம் படிக்கக்கூடிய தரவுகளையும், சிசிடிவி காட்சிகளையும் தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கவில்லை என்றால், அவர்கள் குற்றத்தில் பங்கேற்கிறார்கள் என்று அர்த்தம். நாம் மிகவும் விரும்பும் தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகம் இல்லாததால் நீதித்துறை இதில் தலையிட வேண்டும்.
தேர்தல்களைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன். பிரதமர் மோடி மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் பிரதமராக உள்ளார். அவர் ஆட்சியில் நீடிக்க 25 இடங்களை மட்டுமே திருட வேண்டியிருந்தது. மக்களவை தேர்தலில் பாஜ 33,000 க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று 25 இடங்களை வென்றது. நமது அரசியலமைப்பின் அடித்தளம் ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கிறது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. நாம் கருத்துக்கணிப்புகளைப் பார்க்கும்போது, ஒரு நபர், ஒரு வாக்கு என்ற கருத்தை எவ்வாறு பெறுவது என்பதுதான் அடிப்படை விஷயம். சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? போலி நபர்கள் சேர்க்கப்படுகிறார்களா? வாக்காளர் பட்டியல் உண்மையா இல்லையா? என்று சில காலமாக பொதுமக்களிடையே சந்தேகம் உள்ளது.
ஒவ்வொரு கட்சியையும் ஆட்சிக்கு எதிரான அலை தாக்குகிறது, ஆனால் ஜனநாயக கட்டமைப்பில் ஆட்சிக்கு எதிரான அலையால் பாதிக்கப்படாத ஒரே கட்சி பாஜ மட்டுமே. இதனால் தான் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெருமளவில் தவறாகப் போகின்றன. அதே போல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நடத்தும் உள் கருத்துக் கணிப்புகளும் பொய்த்துப்போய் விடுகின்றன. இதே போன்ற தேர்தல் திருட்டு குற்றம் நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் என மிகப்பெரிய அளவில் செய்யப்படுகிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார். தேர்தல் ஆணையம் மீது உரிய ஆதாரத்துடன் ராகுல்காந்தி தெரிவித்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா தேர்தல் முறைகேடு குறித்து ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்த சில நிமிடங்களில் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் , ராகுல்காந்தி கையெழுத்திட்ட உறுதிமொழியுடன் கா்நாடகா வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களைப் பகிர்ந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில்,’ டெல்லியில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இந்த புகார் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக, 1960 ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(பி) இன் கீழ் இணைக்கப்பட்ட பிரகடனம்/பிரமாணத்தில் கையொப்பமிட்டு திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மேலும் கர்நாடகாவில் எம்பி தேர்தல் தொடர்பாக புகார் மனு அளிக்கும் காலக்கெடு ஏற்கனவே முடிந்து விட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராகுல்காந்தியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ராகுலின் குற்றச்சாட்டு தவறானது என்றால் தேர்தல் ஆணைய விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* நான் சொல்வதை சத்திய வாக்காக எடுத்துக்கொள்ளுங்கள் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிக்கு ராகுல்காந்தி பதில்
தேர்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி கையெழுத்திட்டு புகார் அளித்தால் விசாரிப்பதாக கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து இருந்தார். இதற்கு ராகுல்காந்தி உடனே பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘நான் ஒரு அரசியல்வாதி. மக்களுக்கு நான் சொல்வது என்னுடைய வார்த்தை, கடமை. நான் அதை எல்லோரிடமும் பகிரங்கமாகச் சொல்கிறேன். அதை ஒரு சத்தியமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது அவர்களின் தரவு, நாங்கள் அவர்களின் தரவைக் காட்டுகிறோம். இது எங்கள் தரவு அல்ல. இது தேர்தல் ஆணையத் தரவு. சுவாரஸ்யமாக, அவர்கள் தகவலை மறுக்கவில்லை. ராகுல் காந்தி பேசும் வாக்காளர் பட்டியலில் அவர்கள் தவறு என்று சொல்லவில்லை. நான் சொன்னது தவறு என்று நீங்கள் சொல்லவில்லை? ஏனென்றால் உங்களுக்கு உண்மை தெரியும். நாடு முழுவதும் நீங்கள் இதைச் செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்றார்.
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ சார்பில் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பொறுப்பற்ற மற்றும் வெட்கமற்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை ஒரு மோசடி அமைப்பு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மூலம் வெட்கமின்மையின் அனைத்து வரம்புகளையும் அவர் தாண்டி விட்டார். 2014 முதல் பிரதமர் மோடி தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறார்.அதையும் ஒரு மோசடி என்று நீங்கள் (ராகுல் காந்தி) அழைக்கிறீர்கள். மோடியின் பணி, நேர்மை மற்றும் அவரது தலைமையின் கீழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக அவருக்கு வாக்களித்த நாட்டு மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ராகுல் காந்திக்கு கர்நாடக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அன்புகுமார் எழுதிய கடிதத்தில், ‘வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக பராமரிக்கப்படுவதை காங்கிரஸ் கட்சியினர் அறிவார்கள். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. நவம்பர் 2024 வாக்காளர் பட்டியலின் வரைவு நகல் வழங்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 2025ல் வழங்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதை ஆதாரத்துடன் சமர்ப்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தப்பட்டதில் ஆட்சேபனைகள் இருந்தால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 1960ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் 20(3)(பி) பிரிவின் கீழ் கையொப்பமிட்டு அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்க உதவும். போலியான தகவல் கொடுப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டப்படி தண்டனைக்குரியது’ என்று கூறியுள்ளார். கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக அன்புகுமார் பதவியேற்று இரு வாரங்கள் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை எம்பி கபில்சிபல் கூறுகையில், ’கர்நாடகாவில், குறிப்பாக ஒரு தொகுதியில் மட்டும் நடந்த தேர்தல் கையாளுதலின் தன்மை குறித்து ராகுல் காந்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தினார். இது நமக்கு என்ன சொல்கிறது? நாடு முழுவதும் மிகப்பெரிய தேர்தல் மோசடி நடைபெற்று வருவதை இது தெளிவாகக் குறிக்கிறது.. இந்த உண்மைகள் வெளியிடப்பட்டபோது, நாங்கள் முழு விசாரணை நடத்தி மக்கள் முன் உண்மைகளை வைப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் ராகுல்காந்தியை பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கச் சொல்கிறது. அத்தகைய பிரமாணப் பத்திரத்தை தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்’ என்றார்.