கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பூக்குடலை திருவிழாவை முன்னிட்டு சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். கரூர் மாநகராட்சியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வரும் (30.09.2025) ஆம் தேதி அன்று எறிபத்த நாயனார் பூக்குடலைத் திருவிழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று ஆலயத்தில் உள்ள நால்வர் அரங்கில் பக்தர்கள் இந்த விழாவிற்காக 48 நாட்கள், 45 நாட்கள், 41
நாட்கள் அல்லது குறைந்தது நான்கு நாட்கள் என சிவபெருமானை நினைத்து ருத்ராட்ச மாலைகள் அணிந்து விரதத்தை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமான சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
மாலை அணியும் பக்தர்கள் சுத்தமாக இருந்து, அதிகாலையில் குளித்து நெற்றி நிறைய திருநீர் அணிந்து, வீட்டிலேயே திருவிளக்கு ஏற்றி விரதத்தை கடைபிடிக்கலாம் அல்லது திருக்கோவிலில் திருவிளக்கு ஏற்றி திருப்பதிக பாடலைப் பாடி பூக்கூடலை திருவிழாவிற்கு விரதம் இருக்கலாம் என கூறப்பட்டது. இதில் கரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலருக்கு ஓதுவார் தண்டபாணி ருத்ராட்ச மாலை அணிவித்தார்.