சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நடைமேடை மற்றும் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். நடைமேடை, பயணிகளிடம் வெடி பொருட்கள் எதுவும் இருக்கின்றனவா என ஆய்வு செய்ததுடன், கரூர் ரயில் நிலையத்திற்கு வந்த பாலக்காடு – திருச்சி பயணிகள் விரைவு ரயிலில் ஏறி
அமர்ந்திருந்த பயணிகளிடம் சந்தேகிக்கும்படி யாரும் அமர்ந்திருக்கிறார்களா எனவும், அவரது உடைமைகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வாளர், ரயில் நிலையங்களில் வழக்கமாக ரோந்து பணிகள் ஈடுபட்டு வருவதாகவும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கவனமுடன் நடைமேடை, பார்சல் அலுவலகங்கள், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், ரயில் பெட்டிகள் மீது கல் வீசுபவர்கள் மற்றும் ரயில் பாதையில் கல் வைக்குப்பவர்கள் பெரும்பாலும் சிறுவர்களாக இருக்கிறார்கள். அவர்களை அழைத்து விசாரித்தால் விளையாட்டாக இச்செயலில் ஈடுபட்டதாக அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையம், ரயில்களில் வந்த 25 சிறார்களை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார்.