தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கோரிக்கைகள் முன்வைத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நடைபெறும் இக்கூட்டத்தில், ஒரு முக்கியமான பொதுநலக் கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ் நாட்டில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை தனிப்பட்ட அலுவலகம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுடன் நேரடி தொடர்பு மற்றும் பணிகள் சிறப்பாக நடைபெற இவ்வலுவலகங்கள் அவசியமானவை. எனவே, மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி தடையின்றி தாமதமின்றி மக்களிடம் சென்றடைய, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி உட்பட தோழமை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்திக்கும் ஒரு சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்