Skip to content

தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், “மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.  மாநில திட்டக்குழு உறுப்பினர்  நர்த்தகி நடராஜன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காலந்தோறும் கலைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்  நிகழ்ச்சியை  கலெக்டர் அருணா துவக்கி வைத்தார்.

மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியானது தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.  கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. உயர்கல்வித் துறையுடன், தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
இதன் 100-வது நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது என்றும், எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

அதன்படி  தற்போது  தமிழ்க்கனவு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.  குறைந்தபட்சம் 2 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே இத்திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்திமுடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக்காட்சி, “நான் முதல்வன்”, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்றவைகளின் அரங்குகளும் இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு “உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி”, “தமிழ்ப் பெருமிதம்” ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன.
“தமிழ்ப் பெருமிதம்” சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி/ பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழ்களும், பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்படுகிறது. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி/ கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும், பரிசும் வழங்கப்படுகிறது. இந்த தகவல்களை கலெக்டர் அருணா தெரிவித்தார்.

 

 

error: Content is protected !!