நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல.கணேசன்(80) நேற்று காலமானார். சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வரும் இல.கணேசன் பின்னாளில் திருமணம் செய்து கொள்ளாமல் தனது அண்ணன் குடும்பத்துடனேயே வசித்து வந்தார். அத்துடன் அரசு பணியில் இருந்துகொண்டே ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளராகவும் களமாற்றி வந்தார். 1991ல் பாஜகவில் இணைந்து தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி உயர்வு பெற்ற அவர், பின்னர் விரைவிலேயே அமைப்பின் பொதுச்செயலாளர் பதவியை அடைந்தார். அத்துடன் தமிழகத்தில் பாஜகவை அனைவரிடத்திலும் கொண்டுசென்ற பெருமையும் இல.கணேசனுக்கு உண்டு.
தொடர்ந்து பாஜகவில் நீண்ட காலமாக பொறுப்பில் இருந்து வந்த இல.கணேசன், 2021ல் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அத்துடன் மேற்குவங்க ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வந்த அவர், 2023ல் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு தற்போது வரை அந்த பதவியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், அண்மையில் சென்னை வந்த அவர் தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது, வீட்டில் கால் தவறி கீழே விழுந்தது தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிசிச்சை பலனின்றி நேற்று மாலை 6.23 மணிக்கு இல.கணேசன் காலமானார்.
தற்போது அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்துக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர்கள் , பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்காவிற்கு எதிரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் இல.கணேசன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது! இன்று மாலை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.