Skip to content

ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010ம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர், அவரது மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும், மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றும், வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணையை தினந்தோறும் நடத்தி 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ. பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று(ஆக. 18) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறை இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர். இதன் மூலமாக ஐ.பெரியசாமி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

error: Content is protected !!