தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் எங்கள் சபையின் கொடியை போல, தவெக கொடியும் உள்ளது. எனவே அந்த கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்டகு வந்தது. 80 லட்சம் உறுப்பினர் கொண்ட த.வெ.க., தங்களுடைய சிறிய அமைப்பான தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையை விழுங்க அனுமதிக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு கொடிகளையும் ஒன்றாக பார்த்தால் குழப்பம் ஏற்படுகிறது என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
தவெக கொடியால் தங்களுக்கு எவ்வாறு இழப்பு ஏற்படும் என மனுதாரர் விளக்காததால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என த.வெ.க. தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடியை த.வெ.க. பயன்படுத்தியுள்ளது என கூற முடியாது என தெரிவித்தார். மேலும், 2 கொடிகளையும் ஒப்பிடும்போது, த.வெ.க. கொடியால் குழப்பம் ஏற்படும் என சொல்ல முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.