டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியதாலும், வழக்கத்தை விட அதிக அளவு மழை பொழிவு இருப்பதாலும் கர்நாடகத்தில் உள்ள கே. ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிந்ததால் மேட்டூர் அணைக்கு அவ்வப்போது உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நடப்பு சீசனில் மேட்டூர் அணை ஏற்கனவே 4 முறை நிரம்பி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
கடந்த ஜூன் 29, ஜூலை 5, ஜூலை 20, ஜூலை 26 ஆகிய தேதிகளில் ஏற்கனவே மேட்டூர் அணை 120 அடியை எட்டியதால் உபரி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. அதன் பிறகு கர்நாடகத்தில் இருந்து நீர் வரத்து குறைந்ததால் மேட்டூர் அயைின் நீர்மட்டம் 117 அடியாக குறைந்தது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் மழை பொழிவு அதிகரித்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி நேற்று காலை முதல் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 8 மணி அளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.45 அடி. அணைக்கு வினாடிக்கு 36,242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 37,409 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 89.462 டிஎம்சி.
இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், அங்கு பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. அதிகப்படியான தண்ணீர் இன்று மாலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும். எனவே நாளை காலை மேட்டூர் அணை 120 அடியை எட்டிவிடும். அதன்பிறகு உபரி நீர் திறக்கப்படும். 16 கண் மதகு வழியாக வழியாக நீர் வெளியேற்றப்படும். முன்னேற்பாடாக இன்று காலை 9 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
எனவே நாளை கரூர், திருச்சி,தஞ்சை, உ்ள்ளிட்ட டெல்டா மாவட்ட காவிரியில் அதிக அளவு வெள்ளம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் உபரி நீர் திறக்கப்படலாம்.