இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: இன்றைய தலைமுறையினர் அரசியல் வாதிகளை விடவும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்றுக்கூடியவர்களின் போக்குகளை, துணிந்து விமர்சிக்கும் கூடிய அளவுக்கு அரசியல் ஈடுபாடு, அரசியல் விழிப்புணர்வு தமிழகத்தில் கூடுதலாக இருக்கிறது. வளர்ந்து இருக்கிறது என்று நான் நம்புகிறேன். எனவே திரை மாயை ஆட்சியை பிடிக்க போதாது. தமிழக மக்கள் அப்படி ஏமாற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். லட்சக்கணக்கில் மக்கள் திரள்வது என்பது, திரைப்படத்தில் புகழ்பெற்ற, செல்வாக்கு பெற்ற கதாநாயகர்களுக்கு இயல்பான ஒன்று தான். ஆந்திராவில் பவன் கல்யாண் போல, தமிழகத்தில் விஜயகாந்த், விஜய் உட்பட பல தலைவர்களை தமிழகத்தில் பார்க்கிறோம். ஆனால் அவர்களால் கடைசி வரை தாக்குப்பிடித்து கொண்டு நிற்க முடிகிறதா என்ற கேள்வி எழுகிறது. ரசிகர் பட்டாளம் வேறு, அரசியல் விழிப்புணர்வு பெற்ற களப்பணியாளர்கள் என்பது வேறு. சில லட்சம் பேர் அரசை கைப்பற்ற போதாது. ஒரு இடத்தில் 5 லட்சம் பேர், 10 லட்சம் பேர் திரண்டால் பிரமிப்பை உருவாக்கும். ஆனால் அது ஆட்சிக்கு பயன்படாது. அதை வைத்து நாம் ஆட்சி மாற்றமே நிகழ்ந்து விடும் என்று நாம் சொல்ல முடியாது. கட்சி தொடங்கி, இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி இருக்கிறார்கள். ஒன்றாவது மாநாடு, இரண்டாவது மாநாடு என்று பெயர் சூட்ட முடிந்தது. ஆனால் மாநாட்டில் கருத்தியல் இல்லை. 3 மணி நேரமோ, 4 மணி நேரமோ நிகழ்ச்சி நடந்தது. வெறும் கூச்சல், வெற்று சவடால்கள் விஜய் மாநாடு என்று சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதில் அதிகபட்சமாக, ஆட்சி கைப்பற்றுவோம் என்ற வேட்கை தெரிகிறது. எம்ஜிஆர் காலத்தில் மக்கள் இருந்த மாதிரி இப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கிறவர்கள் வந்து, ஒவ்வொருத்தவரும் ஹீரோ, ஒவ்வொருத்தவரும் பத்திரிகையாளர். இன்றைக்கு மீடியா சொல்வதை நம்பி கொண்டு இருக்கும் மக்களாக இல்லை. ஒவ்வொருத்தவரும் மீடியா பர்சனாக மாறிவிட்டான். ஒரு காலத்தில் வெறும் ஹீரோ திரையில் இருந்து பார்த்தான், மயக்கம் இருந்துச்சு, இன்றைக்கு ஒவ்வொருத்தனும் தானே ஹீரோ என்ற நிலைக்கு உயர்ந்து விட்டான். 1977ம் ஆண்டு காலம் வேற, 2026ம் ஆண்டு காலம் வேறு. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
