Skip to content

மத்திய நிதி அமைச்சரிடம் திருச்சி எம்பி துரை வைகோ கோரிக்கை

மதிமுக எம்பி துரை வைகோ  திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அவர் கூறியதாவது…

தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, சிறந்த விமான போக்குவரத்து மற்றும் இரயில் இணைப்புகளைக் கொண்டிருப்பதால், உலர் துறைமுகத்திற்கு (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.

திருச்சியில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதுடன், நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை ஆதரிக்கவும், தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது மிகவும் அவசிய தேவையாகும்.

ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழித்துறை, ஒன்றிய போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை, ஒன்றிய வர்த்தகம் & தொழில்துறை மற்றும் ஒன்றிய நிதித்துறை என 4 ஒன்றிய அமைச்சகங்கள் தொடர்புடையது இந்த உலர் துறைமுகம் அமைக்கும் திட்டமாகும்.

கடந்த ஓரிரு நாட்களில் மாண்புமிகு அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், மாண்புமிகு அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மாண்புமிகு அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆகிய 3 ஒன்றிய அமைச்சர்களை நேரில் சென்று சந்தித்து இந்த உலர் துறைமுகம் திட்டம் அமைப்பது தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். நான் சந்தித்த மேற்கண்ட ஒன்றிய அமைச்சர்கள் “இது முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்” என்று நம்பிக்கை தரும் வகையில் பதில் அளித்தனர்.

மேலும் இதுதொடர்பாக இன்று (21.08.25) மதியம் 3 மணி அளவில் ஒன்றிய நிதித் துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது தொடர்பான என்னுடைய கோரிக்கையை உரிய தரவுகளோடு முன்வைத்தேன்.

ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள் திருச்சியில் உலர் துறைமுகம் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் நம்பிக்கையுடன் பதில் அளித்தார்.

திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்காக இதுவரை நான்கு அமைச்சர்களுடனான சந்திப்பு இத்திட்டம் நிறைவேறும் என மிகுந்த மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் உள்ளேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!