பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… கள்ளக்காதலன் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( 46 ) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் பெண் செந்தில்குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் செந்தில்குமார் அந்த பெண்ணை ஸ்ரீரங்கம் அருகே பார்த்து பேச முயற்சித்துள்ளார். அவர் பேச மறுக்கவே அவரை செந்தில்குமார் கத்தியால் குத்தியுள்ளார். கைகளில் காயமடைந்த அந்தப் பெண் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் . இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கடன் தொல்லையால்.. கார் மெக்கானிக் மாயம்
திருச்சி எடமலைபட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் ஷா ( 45 ) கார் மெக்கானிக் உழவர் சந்தை அருகே பட்டறை நடத்தி வருகிறார். இவரது தொழிலில் சரியான வருமானம் இன்மையால் கடன் பெற்றுள்ளார். கடன் கூடி போகவே கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் விடு திரும்பவில்லை எங்கு தேடியும் ,அவர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மூதாட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (60). இவருக்கு கம்பரசம்பேட்டை பகுதியில் 89 சென்ட் நிலம் உள்ளது. இவர் திருச்சி சங்கரன்கோவில் பிள்ளை சாலையைச் சேர்ந்த ஸ்ரீ வட்சன் என்பவருக்கு அந்த நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் ஸ்ரீவட்சன் அந்த நிலத்தை பாலசுப்பிரமணி மற்றும் ராஜா ஆகியோருக்கு சின்னம்மாளுக்கு தெரியாமல் விற்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சின்னம்மாள் இது குறித்து விசாரிக்க ஸ்ரீவட்சன் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அவர் சின்னமாளை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளார் .இது குறித்து கோட்டை போலீசார் ஸ்ரீ வட்சன் பாலசுப்பிரமணி மற்றும் ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தெப்பக்குளம் வியாபாரி மர்ம சாவு
திருச்சி கீழ சிந்தாமணி அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன் (65) . திருச்சி தெப்பக்குளம் அருகே சாலையோர வியாபாரியாக தலகாணி மற்றும் ஆடைகள் விற்று வந்தார். இவருக்கு ராணி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மோகன் சிந்தாமணி பூசாரி தெரு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தெரியவந்தது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
போதை மாத்திரைகள், ஊசி விற்ற வாலிபர் கைது
திருச்சி பொன்மலைப்பட்டி சாலை அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக பொன்மலை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர் .இதில் அவர் திருச்சி வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்த ஹசன் அலி ( 27 ) என்பதும் அங்கு அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பொன்மலை போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அவரிடம் இருந்து 100 போதை மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில், 15 மருத்துவ ஊசிகள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு.. 3 சிறுவர்கள் கைது
திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (28). இவர் பொன்மலை கம்பர் தெரு அருகே இரு சக்கர வாகன பைனான்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த சிறுவர்கள் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலசுப்பிரமணியன் கடை முன் வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து பொன்மலை போலீஸ் சார் வழக்கு பதிந்து இரண்டு 17 வயது சிறுவர்கள் மற்றும் ஒரு 16 வயது சிறுவனை பிடித்து விசாரிக்கின்றனர்.