சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இன்றும் தொடர்ந்து நடந்தது. இந்த 2 நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி என இருவரும் இருதரப்பு சந்திப்பில் கலந்து கொள்ள இருந்தனர். அப்போது, புதின் தன்னுடைய ஆடம்பர மற்றும் அதிக பாதுகாப்பு கொண்ட லிமோசின் ரக காரில் வரும்படி கூறி பிரதமர் மோடியை அழைத்து சென்றார். இருவரும் காரில் ரிட்ஜ்-கார்ல்டன் ஓட்டலுக்கு சென்றனர்.
அதற்கு முன், பிரதமர் மோடி வருவதற்காக 10 நிமிடங்கள் வரை புதின் காத்திருந்தபடியே காணப்பட்டார். அவர் வந்ததும் இருவரும் ஒரே காரில் ஒன்றாக சென்றனர். அப்போது பல்வேறு விசயங்களை பற்றி அவர்கள் உரையாடினர். கார் ஓட்டலை அடைந்த பின்னரும், அவர்கள் இருவரும் 45 நிமிடங்கள் காரில் அமர்ந்து பேசியபடி இருந்தனர். அது ஆழ்ந்த அறிவு சார்ந்த ஒன்றாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எனினும், இருவரும் என்ன பேசினர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஏனெனில், அது ரகசிய பேச்சு என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினுடன் காரில் பயணித்த புகைப்படம் ஒன்றை பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.
இதன்பின்னர் நடந்த இருதரப்பு சந்திப்பில் இருவரும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது, அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திர தன்மையை உறுதிப்படுத்துவது பற்றியும் பிரதமர் மோடி புதினிடம் வலியுறுத்தினார்.