தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு அவர்களை ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்துள்ளார்.
அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, 2009-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) அடிப்படையில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் வாணியம்பாடியில் செய்தியாளர் சந்திப்பில், TET தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ”கல்வி நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம். மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கின் தீர்ப்பு விவரம் முழுமையாக கிடைத்த பிறகு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும். எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது, யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.