கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக மாபெரும் பேரணி நடைபெற்றது. கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்புக் கிளப், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் பேரணியைக் கோவை மாவட்டக் காவல்துறை ஆணையாளர் திரு.ஆர்.கோகுல கிருஷ்ணன் மற்றும் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலிருந்து மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை போதைப்பொருள் எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி மாணவிகள் பேரணியாகச் சென்றனர். போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், பேரழிவுகள் பற்றி உணர்த்தி, போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு மாணவிகள் நாடகம் நடத்தினர். இளைஞர்களும் பொதுமக்களும் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட வேண்டியது தற்போது நம்முன் இருக்கும் மாபெரும் சவாலாகும்.
போதப்பழக்கத்தின் பிடியிலிருந்து நம் நாட்டையும் மக்களையும் காக்க அனைவரும் அணிதிரண்டு வர வேண்டியது இன்றியமையாதது என்பதைக் கல்லூரி மாணவிகளின் பேரணி உணர்த்தியது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் போதை என்னும் அரக்கனின் பிடியிலிருந்து நம் மக்களைக் காப்பாற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எங்கள் மாணவிகள் முன்னெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.