Skip to content

செப்.7, 8-இல் முழு சந்திர கிரகணம் காண மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடு

வரும் செப்.7, 8 ஆகிய தேதிகளில் நிகழும் முழு சந்திர கிரகண நிகழ்வை காண திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, திருச்சி அஸ்ட்ரோ கிளப் தலைவர் தலைவர் சு. ஜெயபால், செயலாளர் சு. உமா ஆகியோர் கூறியதாவது:
வரும் செப். 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியாவில் ஒரு முழு சந்திர கிரகணம் நிகழப் போகிறது.
இந்நிகழ்வு செப்டம்பர் மாதம் 7 தேதி இரவு 8:58 மணிக்கு ஆரம்பித்து 8 தேதி அதிகாலை 2:25 மணிக்கு நிறைவடையும். சுமார் 5 மணி 27 நிமிடங்கள் நீடிக்கும் இந்த நிகழ்வு சமீப ஆண்டுகளில் காணப்படும் மிக நீண்ட, ஓரளவுக்கு இந்தியா முழுவதும் காணக்கூடிய ஒரு நிகழ்வாகும். இதில் 7ஆம் தேதி இரவு முழு சூரிய கிரகணம் சுமார் 82 நிமிடங்கள் வரை நீடித்து 8ம் தேதி அதிகாலை 00:22 மணிக்கு நிறைவடையும் இந்த நேர இடைவெளியில் முழுவதுமாக சிவப்பு நிறத்தில் காணப்படும் இச்சந்திரன், ரெட் மூன் என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியன் பூமிக்கு நடுவே சந்திரன் வந்தால் சந்திரனின் நிழல் மறுபக்கத்திலுள்ள பூமியின் மேல்சில பகுதிகளை மறைக்கும். இதுவே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அது போல சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது பூமியின் நிழல் மறுபக்கத்திலுள்ள சந்திரனின் மேல் விழுகிறது. இதுவே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது பூமியின் எந்த பகுதியின் மேல் சந்திரனின் நிழல் விழுகிறதோ அந்த பகுதி சிறிதளவு ஒளி குறைந்து இருளாக காணப்படும். ஆனால், முழு சந்திர கிரகணத்தின் போது அவ்வாறாக நடப்பதில்லை; மாறாக நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும். இதற்கு காரணம் ராலே ஒளிச்சிதறல் விளைவு என்று அழைக்கப்படும் நிகழ்வாகும். சூரியஒளி நமது பூமியின் மேல் பட்டு முழுவதுமாக மறைப்பதற்கு பதில் பூமியில் மேற்பரப்பில் இருக்கும் வாயு மூலக்கூறுகளால் பெரும்பாலான நீல நிறம் சிதறடிக்கப்பட்டு, மீதமுள்ள சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் சந்திரன் மேல் விழுவதால் சந்திரன் ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.

இந்நிகழ்வினை தொலைநோக்கி, பைனாகுலர் மூலமாகவோ அல்லது வெறும் கண்களாலுமே பார்க்க முடியும். தமிழ்நாடு முழுவதும் இந்நிகழ்ச்சியை இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி மற்றும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்கள் இணைந்து பொதுமக்கள் கண்டுகளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்சி அஸ்ட்ரோ கிளப் சார்பாக புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகம் மற்றும் பெல் ஊரக வளாகம் ஆகிய இரண்டு இடங்களிலும்; துறையூர் சார்பாக கலிங்கமுடையான்பட்டி, சுவாமி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த நிகழ்வை அனைவரும் அவரது வீடுகளில் இருந்தபடியே விண்ணில்லா காணலாம் என்றனர்.

error: Content is protected !!