வடமாநிலங்களில் பரவலாக பெய்து வரும் பருவமழையால், பஞ்சாபில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை வெள்ளத்திற்கு 30 பேர் பலியாகி உள்ளனர். 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பஞ்சாபிற்கு உதவும் வகையில், கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் வழங்குவார்கள் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் நேற்று கூறினார்.
அவர், பஞ்சாப் மாநிலத்திற்கு நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார். வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் செல்கிறார்.
இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் வெள்ள நிலைமையை முன்னிட்டு, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் வெளியிட்ட உத்தரவின்படி, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் செப்டம்பர் 7-ந்தேதி வரை விடுமுறை என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதுபற்றி பஞ்சாப் கல்வி மந்திரி ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறும்போது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கூறினார்.
இதற்கு முன்பு, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் செப்டம்பர் 3 வரை அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஒவ்வொருவரும், அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றும்படியும் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் கேட்டு கொண்டார்.