அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நேற்றைய தினம் தனது கட்சி தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முக்கியமான அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக டி.டி.வி. தினகரன், தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாமும் 3, 4 மாதங்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என காத்திருந்தோம். அதற்கான வாய்ப்பு தெரியவில்லை. எந்தக் கூட்டணியில் இடம் பெறுவோம் என டிசம்பரில் அறிவிப்போம்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தங்கள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததாகவும், அது தேச நலனுக்காகவும், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது முறை ஆட்சிக்காகவும் இருந்ததாகவும் கூறினார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் மாநில அளவிலானது என்பதால், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு, புதிய கூட்டணி குறித்து டிசம்பரில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”துரோகத்தின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தொண்டர்கள் ஒருபோதும் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டார்கள். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என இத்தனை காலம் பொறுமையாக இருந்தோம்.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் அமித் ஷாவின் முயற்சிகள் எடுபடவில்லை” என்றார்.
மேலும், தினகரனின் இந்த அறிவிப்பு, அதிமுகவின் முன்னாள் தலைவர் ஓ. பன்னீர்செல்வமும் (OPS) NDA-வில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து வந்துள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய கூட்டணி மாற்றங்களையும், தவெக (தமிழக வெற்றி கழகம்) உள்ளிட்ட பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.