வேலூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (54). இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் சிறிய அளவில் மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். திடீரென அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியை குடியாத்தம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையறிந்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மருத்துவர்கள் காவல்துறைக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில், மேல்பட்டி காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் கஜேந்திரன் என்பவர் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து மேல்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்ததோடு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், “குடியாத்தம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியது விசாரணையில் உறுதியானது. எனவே அவரை உடனே கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். தற்போது போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பாதுகாப்பு மற்றும் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.
ஒரே தெருவில் இருக்கும் மளிகை வியாபாரி இப்படிப்பட்ட மோசமான காரியம் செய்வார் என கனவிலும் நினைக்கவில்லை. எங்கள் மகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என பெற்றோர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது.
இந்த குற்றம் செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.” என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.