கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி இன்று அதிகாலை கடற்கரை சாலையில் சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் காரில் பயணம் செய்தனர். அவர்கள் ‘கூகுள்’ மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி பயணம் செய்தனர். கடலூர் சொத்திக்குப்பம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது மதுபோதையில் கடற்கரை மணலில் காரை இறக்கி வேகமாக ஓட்டினர்.
திடீரென கார் கடலில் இறங்கியது. சிறிது தூரம் கடலுக்குள் சென்ற கார் நின்று விட்டது. மதுபோதையில் கடலில் தத்தளித்த 5 பேரையும் அப்பகுதியில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் போலீசார் உதவியுடன் டிராக்டர் மூலம் கடலில் இறங்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்கப்பட்டது. மதுபோதையில் இருந்தவர்கள் ‘கூகுள்’ மேப்பை பார்த்தபடி காரை கடலுக்குள் ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.