பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாசிற்கும் அன்புமணி ராமதாசிற்கும் இடையே நிலவி வந்த கருத்து மோதலில் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து செயல் தலைவர் பதவிக்கு மாற்றி ராமதாஸ் அறிவித்திருந்தார். செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்காத நிலையில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன் வைத்து விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பட்டன. இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் 10 தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென தெரிவித்தபோதிலும் அன்புமணி ராமதாஸ் பதிலளிக்காததால் அன்புமணி ராமதாசை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செயல்தலைவர் பதவியிலிருந்து மருத்துவர் ராமதாஸ் இன்று நீக்கினார். நீக்கத்தை தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்கள் தைலாபுரம் ராமதாஸ் இல்லத்தின் முன்பு ஏதேனும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தை ராமதாஸ் தரப்பினர் பூட்டியதால், அன்புமணி தரப்பினர் – ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அலுவலகம் இயங்கி வரும் கட்டடத்தின் உரிமையாளரான செந்தில், அன்புமணி தரப்பினர் அதனை பயன்படுத்திக் கொள்ள எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்.