Skip to content

கேப்டனை பின்பற்றும் விஜய்…பிரேமலதா பரபரப்பு பேட்டி

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கினார். காலை 9:40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜயின் பிரச்சார வாகனம், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் கடுமையான தாமதத்தை சந்தித்தது. வழிநெடுகிலும் த.வெ.க தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு வரவேற்றதால், விமான நிலையத்திலிருந்து மரக்கடை வரையிலான 3 கிலோமீட்டர் பயணத்துக்கு மட்டும் 2 மணி 45 நிமிடங்கள் ஆகியது.

இன்னும் அவர் மரக்கடையை நெருங்கி பேச ஆரம்பிக்கவில்லை இருப்பினும் தொண்டர்கள் அவருடைய கேரவனுக்கு பின்னால் வழிநெடுக அன்பை பொழிந்து கொண்டு வருகிறார்கள்.  இந்நிலையில், விஜய் இன்று பிரச்சாரம் தொடங்கியது குறித்து அரசியல் தலைவர்கள் பலரிடம் கேள்விகள் கேட்ப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது அப்போது அதற்கு பதில் அளித்த அவர் ” 20 ஆண்டுகளுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது எப்படி இருந்ததோ அதை தான் நான் விஜயிடம் இப்போது பார்க்கிறேன்.

நான் சொல்வது வேண்டுமானால் உங்களுக்கு புதுசாக இருக்கலாம். நாங்கெல்லாம் கேப்டன் விஜயகாந்துடன் வாழ்ந்திருக்கிறோம்…விஜயை சின்ன வயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கேப்டன் தொடங்கிய கட்சி இன்று வரை 20 ஆண்டுகளாக எத்தனையோ சவால்கள் எத்தனையோ விதமான இடையூறுகள் என எல்லாம் கடந்து தான் 21 ஆண்டு அடியெடுத்து வைக்கிறோம். அதே சமயம் காவல்துறை வந்து இவ்வளவு தடை போடுகிறார்கள் என்று நாம் சொல்ல முடியாது.

ஏனென்றால், நாளைக்கு ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினை நடக்கிறது என்றால் அதற்கு யார் பதில் சொல்வார்கள்? எனவே, இப்படி பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. எனவே, ஒரே கண்ணோட்டத்தில் தடை செய்கிறார்கள் என்று பேசக்கூடாது. போலீசார் இந்த நேரத்திற்குள் முடிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த கூட்டத்தை பார்த்தால் அது நிச்சயமாக சாத்தியமில்லாத ஒன்று. பாப்போம் என்ன நடக்கிறது என்று நான் வரும்போது தான் செய்தியை பார்த்தேன். அவர் வந்துகொண்டு இருக்கிறார்.

இன்னும் அவர் பேசவில்லை..அவர் என்ன பேசுகிறார் இந்த நாள் எப்படி போகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய பிரேமலதா ” விஜயகாந்த் பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து தான் அரசியல் வந்தார். அவர் அரசியல் வந்தவுடன் எந்த பெரிய நடிகரும் கட்சியில் ஆதரவு கொடுக்க இணையவில்லை. தனியாக நின்று தான் வெற்றிபெற்றார். ஒரு குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தை பெற்ற முதல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தான்.

எனவே, அரசியலில் இடையூறுகள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.தமிழகத்தில் மிகப்பெரிய 2 கட்சிகள், தேசிய கட்சிகள் உள்ளதால் தடைகளை கடந்து வருவதுதான் வெற்றி. இருந்தாலும் சாதாரண சவால் இல்ல.. அன்று விஜயகாந்த் போல இன்று விஜய் விஜயகாந்தை பின்பற்றி வருகிறார். அவருக்கு நான் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!