கரூரில் திமுக முப்பெரும் விழா 17-ந்தேதி நடக்கிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் திமுக சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.இதற்காக
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் கரூர் செல்லும் வழியில் திருச்சிக்கு விமான மூலம் வருகிறார்.திருச்சி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுஆய்வு நடத்துகிறார்.கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.முன்னதாக தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு,மு க ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆய்வுக்கூட்டத்தை முடித்தபின் முதல்வர் மு.க .ஸ்டாலின் கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் திறக்கப்படாமல் இருந்தது. இதை பார்த்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த பொது மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு விடுமுறை விட்டு விட்டார்களோ என்று எண்ணினர்.ஆனால் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வர்ணம் பூசும் பணி நடைபெற்றதால் பூட்டப்பட்டிருந்தது.குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள் பின்புறம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.முதலமைச்சரின் திருச்சி வருகையையொட்டி திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
