நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இதையடுத்து நேபாளத்தின் இடைக்கால பிரதமராக, முன்னாள் தலைமை நீதிபதி சுஷீலா கார்கி(73) கடந்த 12-ந்தேதி பதவியேற்றார்.
இந்த நிலையில், இடைக்கால பிரதமர் சுஷீலா கார்கியால் மந்திரிசபையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 3 புதிய மந்திரிகள் இன்று முறைப்படி பதவியேற்க உள்ளனர். முன்னதாக சுஷீலா கார்கியின் பரிந்துரைப்படி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் குல்மான் கிசிங், முன்னாள் நிதி மந்திரி ராமேஷ்வர் கானல் மற்றும் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆர்யல் ஆகியோரை நேபாள ஜனாதிபதி ராம்சந்திர பவுடல் நேற்று மந்திரிகளாக நியமித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 3 பேரும், காத்மாண்டுவின் மகாராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக் கொள்ள உள்ளனர். இதில் குல்மான் கிசிங் எரிசக்தி, நீர்வளம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரியாகவும், ராமேஷ்வர் கானல் நிதி மந்திரியாகவும், ஓம் பிரகாஷ் ஆர்யல் சட்டம் மற்றும் உள்துறை மந்திரியாகவும் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.