Skip to content

அரியலூர்… மகளிர் சுயஉதவிக்குழுக்களுடன் கடன் இணைப்பு-அடையாள அட்டை வழங்கல்

  • by Authour

தமிழ்நாடு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.49.57 கோடி மதிப்பிலான கடன் இணைப்புகள் மற்றும் 806 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (16.09.2025) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன்

செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட திட்டங்களை அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு 1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழுக்களை அமைக்கத் தொடங்கியது. மகளிர் முன்னேற்றத்திற்காக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு தற்போது சமூக பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளை உருவாக்கி முறையாக பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்கி வங்கி கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. தற்போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வங்கி நேரடி கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் இன்றையதினம் வழங்கினார் அதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டம், அரசு அரசு மருத்துவக்கல்லூரியில் அரியலூர் மாவட்டத்தில் ஊரக/நகர்ப்புர பகுதிகளில் செயல்பட்டு வரும் 433 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48.33 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன் தொகையும், ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு பெருங்கடன் ரூ.50.00 இலட்சம், 16 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வட்டார வணிக வள மைய தொழில் கடனாக ரூ.8.00 இலட்சம் பெண் முனைவோர்களுக்கான தொழில் கடனாக ரூ.43.00 இலட்சம் மற்றும் 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.50 இலட்சம் சமுதாய முதலீட்டு நிதியும் ஆக மொத்தம் ரூ.49.565 கோடி மதிப்பில் கடன் தொகைகளையும், மேலும், 806 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்;ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சு.தேன்ராஜ், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வேதலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!