மதுரை ஆண்டாள்புரம் அகரிணி நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( 41). இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் தனது பிறந்த நாளையொட்டி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நண்பர் செல்லவேலு (33) என்பவருடன் காரில் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் பாலக்காடு மாவட்டம் சித்தூரில் இருந்து கோவை நோக்கி கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பாலக்காடு-பொள்ளாச்சி சாலையில் உள்ள கொழிஞ்சாம்பாறையில் சென்ற போது, கார் மீது அரசு பஸ் திடீரென மோதியது. இதில் பிரவீன் குமார், செல்லவேலு ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது, பிரவீன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் செல்லவேலு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.