ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது.. “திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் சாதித்து, திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர், ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். இந்த நிலையில் அண்மையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (செப்.18) சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.