விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.மெய்யூர், சித்தலிங்கமடம், ஊராட்சியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் என பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, “அண்ணாமலை எங்கு இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது. அவர் இருப்பதை தெரியப்படுத்துவதற்காக கரூர் முப்பெரும் மாநாடு சாராயம் காய்ச்சிய காசில் நடத்தபட்டது என பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி எதற்கு டெல்லி சென்றார்?, எத்தனை கார் மாரி சென்றார்?, அமித்ஷாவை சந்தித்து என்ன பேசினார்? என்பதெல்லாம் போக போக தெரியும். அதிமுக கட்சியை அமித்ஷாவின் அடிமை கட்சியாக மாற்றிவிட்டது எடப்பாடி செயல்” என்றார்.