Skip to content

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் அன்புராஜ் ( 23). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பிரித்திகா(20) என்பவரை காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிருத்திகாவை திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோரிடம் அன்புராஜ் பெண் கேட்டுள்ளார். இருவரும் ஒரே சமூகமாக இருந்த போதிலும், திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது பெற்றோரின் சம்மதத்துடன் அன்புராஜ் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து இருவரும் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தனர். பிருத்திகா அவரது குடும்பத்தினருடன் போனில் பேசுவது அன்புராஜிக்கு பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவில் பிருத்திகா தனது தாய் மற்றும் சகோதரரிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்கு வந்த அன்புராஜ் போனில் பேசியதை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கணவன் அன்புராஜ் தனது மனைவி பிரித்திகா அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கீழே தள்ளி உள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராத அன்புராஜ், வீட்டில் காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியால் பிரித்திகாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.  அன்புராஜ் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்செல்ல முடிவு செய்துள்ளார். இதற்காக மனைவி உடலை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு அருகில் உள்ள சந்திப்பு பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் சென்ற அன்புராஜ், கோவில்பட்டி பஸ்சில் ஏறி புறப்பட்டுள்ளார். ஆனாலும் மனம் கேட்காமல் நடந்ததை தனது சகோதரரிடம் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அன்புராஜின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அன்புராஜ், மனைவியை கொலை செய்ததாக நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார்.

பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நெல்லை சந்திப்பு போலீசார் விரைந்து சென்றனர். நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் போலீசார் பிரித்திகா உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “அன்புராஜ்-பிரித்திகா ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் அதாவது கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின்னர் சுமார் 1  1/4 வருடங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் 2 பேரும் சேர்ந்து வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். உள்ளூரில் இருந்தால் பிரச்சினை வந்து கொண்டிருக்கும் என்று கருதி நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்திற்கு வந்து வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் பிரித்திகாவின் தந்தை இறப்பின் காரணமாக அவரது குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகை நிதி உதவியாக வந்துள்ளது.

அதனை அன்புராஜ் வாங்கி செலவு செய்துவிட்டதாகவும், இதுதொடர்பாக பிரித்திகாவின் அம்மாவுக்கும், அன்புராஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக எழுந்த பிரச்சினையில் தான் அன்புராஜ் இனி தனது மாமியாருடன் பேசக்கூடாது என்று பிரித்திகாவிடம் கூறியிருந்துள்ளார். இதனால் பிரித்திகா தனது தாயாருடன் பேசுவதை தவிர்த்த நிலையிலும், அவரது தாய் அவ்வப்போது பிரித்திகாவிடம் பேசி வந்ததால் மாமியார் குறுக்கீடாக இருக்கிறாரே என்ற ஆத்திரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் பிரித்திகாவின் கொலையில் முடிந்துள்ளது” என தெரியவந்துள்ளது.

error: Content is protected !!