ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா சவுத்ரி (35), தன்னை சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமாக காட்டிக்கொண்டு ஆண்களை குறிவைத்து பழகி வந்துள்ளார். அவர்களிடம் நன்கு நெருங்கி பழகிய பின்னர், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்துவிடுவதாக மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த காதல் வலையில் சிக்கிய 64 வயது முதியவர் ஒருவரிடம் இருந்து 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க நகைகளையும், அரசு மருத்துவர் ஒருவரிடமும் இதே பாணியில் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் ரேணுகா சவுத்ரியை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது போலவும், திடீரென மயங்கி விழுவது போலவும் அவர் நாடகமாடியுள்ளார். ஆனால், அவரது நாடகத்தை நம்பாத காவல்துறையினர் ரேணுகாவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.