Skip to content

நகை திருட்டு வழக்கில் கர்ப்பிணி பெண் பெங்களூரில் கைது

சென்னை வியாசர்பாடி, காந்திஜி 3வது தெருவை சேர்ந்தவர் செல்லப்பா, உமா தம்பதி. இவர்கள் இந்த வீட்டின் கீழ்தளத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். வடபெரும்பாக்கத்தில் செல்லப்பா சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வருகிறார். அவரது மனைவி உமா, தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்க்கிறார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி காலை இத்தம்பதி வீட்டை பூட்டிவிட்டு, அதன் சாவியை பாத்ரூமில் மறைத்து வைத்துவிட்டு வேலைக்கு கிளம்பி சென்றுள்ளனர். பின்னர் அன்று மாலை உமாவை வீட்டு உரிமையாளரின் மருமகள் தொடர்பு கொண்டு, உங்கள் வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் செல்லப்பாவும் உமாவும் விரைந்து வந்து, வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் நகைகள் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இப்புகாரின்பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து புளியந்தோப்பு சரக துணை ஆணையர் முத்துக்குமாரின் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜ்கிரண் தலைமையில் போலீசார் சிசிடிவி ஆதாரங்களை வைத்து, நேற்று பெங்களூரில் வைத்து இவ்வழக்கு தொடர்பான பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்டவர் கர்நாடக மாநிலம், பெங்களூரு, பாரதி நகர், காமராஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி (34) என்பதும், இவர்மீது சென்னை, கர்நாடகா பகுதிகளில் சுமார் 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், இவர் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் அருகில் செருப்பு ஸ்டாண்ட், அலமாரிகளில் சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளார்களா என்பதை கண்டறிவார். அப்படி ஏதேனும் சாவி கிடைத்தால், அதன்மூலம் வீட்டை திறந்து நகைகளை திருடி செல்வதை வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது. அதேபோல் வியாசர்பாடி பகுதியில் ஜெயந்தி நோட்டமிட்டபோது, வீட்டின் அருகே உமா சாவியை மறைத்து வைப்பதை நோட்டமிட்டு, அந்த சாவி மூலம் உமாவின் வீட்டில் நகைகளை திருடி சென்றிருப்பதும் தெரியவந்தது. பிடிபட்ட ஜெயந்தியிடம் இருந்து ஏழரை சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மீதமுள்ள நகைகளை மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக விசாரணையில் ஜெயந்தி கூறியுள்ளார். அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!