Skip to content

6 பானி பூரி கேட்டேன்”…  வெறும் 4 தான் கொடுத்தாங்க… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் பகுதியில் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து தீடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் போராட்டத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறிய காரணத்தைக் கேட்டு, போலீஸ்காரர்கள் உள்பட அங்கிருந்த அனைவரும் திகைத்தனர்.

அந்த பெண் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று பானிபூரி வாங்கியுள்ளார். கடைக்காரர் அந்த பெண்ணிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு 4 பானிபூரிகளை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண் தனக்கு 6 பானிபூரிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் கடைக்காரருக்கும், அந்த பெண்ணுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண் நேராக சாலைக்கு நடுவே சென்று தரையில் உட்கார்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். அதுமட்டுமின்றி, போலீசாரிடம் தனக்கு வந்து சேர வேண்டிய 2 பானிபூரிகளை பெற்றுத் தர வேண்டும் என்று அந்த பெண் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மேலும், தன்னை ஏமாற்றிய கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த கோரிக்கையை கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற  போலீசார், அழுது கொண்டிருந்த பெண்ணை சமாதானம் செய்ய முயன்றனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் ஒருவழியாக அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!